Thursday, 27 October 2011

"எ"ஆம் அறிவு: அத்தியாயம் 7: உறவு


அத்தியாயம் 6

இதுவரை
மரபணுக்கள் மூலம் கடந்தகால நினைவுகளை சேகரிக்கும் பொறியை கண்டுபிடிக்கும் விஞ்ஞானி ராமானுஜம், அதை சோழர்களின் வாரிசான ரவி மூலம் சோதித்து, அவனுடைய கடந்த கால நினைவுகள் மட்டுமில்லாமல் அவனுடைய முன்னோர்களின் நினைவுகளையும்  சேகரிக்க முடியும், அதன் மூலம் எண்ணற்ற பயங்களை அடைய முடியும் என  ரவியை நம்பவைக்கிறார்.  ராமானுஜத்தின் உதவியாளராக திவ்யா ஆய்வகத்தில் வேலை செய்கிறாள்.  ராமானுஜம் ரவியிடம் ஒரு முக்கியமான தகவலை தெரிவிக்கும் வேளையில் முகம்தெரியாத ஒருவரால் சுடப்படுகிறார்.

இனி..

“ஹா, என்னை கடவுளாக்கும் தகுதியை அழிக்க நினைக்கும் துரும்பு இவனா.” ரவியை பார்த்து அந்த உருவம் கோபமாக கர்ஜித்தது.

தன் நினைவுகளில் பார்த்த அருண்மொழிவர்மனின் குருவின் சாயலில் ஒருவர் ஆய்வகத்தின் வாயிலின் முன் நிற்பதையும் தன் கண்முன் வீழ்ந்து கிடக்கும் ராமானுஜத்தின் உடலையும்  அதிர்ச்சியுடன் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான் ரவி.

துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் திவ்யா எச்சரிக்கை அமைப்பின் பொத்தனை அழுத்த  ஆய்வகத்தை சுற்றி ஒரு இரும்புத்திரை அனைத்து வாயில்களையும் மூடியது.

“இனிமேல் தாமதிக்க நேரமில்லை உடனே நாம் இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும்.” திவ்யா அவசரப்படுத்தினாள்.

“இங்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் நான் வருவதாக இல்லை”
என ரவி கூறியதை கேட்டு திவ்யா “போகும் வழியில் அனைத்தையும் விவரிக்கிறேன், இந்த இரும்புத்திரை நமக்கு சிறிது கால அவகாசம் தரும், அதற்குள் இங்கிருந்து வெளியேற வேண்டும்.” என பதிலளித்தாள்.

சில எண்களை கணிப்பொறியில் திவ்யா அழுத்த “சுய அழிவு முறை ஆரம்பம், இன்னும் இரண்டு நிமிடங்களில்,” என கணினி குரல் ஒலிக்க எச்சரிக்கை மணி அடிக்க ஆரம்பித்தது. ஆய்வகத்தின் நடுவில் ஒரு பிளவு ஏற்பட்டு ஒரு சுரங்க வழி உருவானது. திவ்யா அந்த வழியில் செல்ல ரவி அவளை பின்தொடர்ந்தான்.

“பயப்பட வேண்டாம்,  இன்னும் சற்று நேரத்தில் இந்த  தீவை விட்டு வெளியேறிவிடுவோம்”

“தீவா, பரவாயில்லையே இப்போதாவது நான் எங்கிருக்கிறேன் என்று தெரிந்ததே, பயமெல்லாம் எப்போதோ போய்விட்டது. ராமானுஜத்தின் நிலமையை நினைத்தால்தான் வருத்தமாக இருக்கிறது.”

“இதுபோல் நடக்கும் என்று முன்பே அறிந்திருந்ததால்தான் அவர் இவ்வளவு முன்னெச்சரிக்கையாக இந்த சுரங்கவழியையும், நாம் செல்லப்போகும் அதிவேக கப்பலும் தயார் நிலையில் வைத்திருந்தார்.”

“கப்பலா, பரவாயில்லையே நான் நீச்சலடித்துத்தான் போகவேண்டும் என்று நினைத்தேன்.”

படகில் ஏறிய திவ்யாவை தொடர்ந்து சென்றான் ரவி. பார்க்க ஒரு சாதாரண படகு போல் தோற்றமளித்தாலும் ஏறிய பின்புதான் அது ஒரு நீர்மூழ்கி கப்பல் என தெரிந்தது. தான் பார்த்தது ஒரு பிரம்மாண்டத்தின் ஒரு பகுதிதான் என்பதும் ரவிக்கு புரிந்தது.படகில் ஒரு இடத்தில் தன் கட்டைவிரலை வைக்க படகின் இயந்திரம் ஆரம்பமானது.

“வணக்கம் திவ்யா, இந்த நீர்மூழ்கி ஆய்வகம் உங்களை வரவேற்கிறது. இலக்கை சென்றடைய  ஒன்பது மணி முப்பது நிமிடம் உள்ளது.” என இயந்திர குரல் வரவேற்றது.

“இனி கவலையில்லை ரவி, இன்னும் ஒன்பது மணி நேரத்திற்கு எந்த கவலையில்லாமல்  நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்”

“ஹும், இங்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் எப்படி நிம்மதியாக இருக்க முடியும், நடந்த விஷயங்களில் இருந்த வெளிவரவே பல மாதங்களாகும், பயணத்தில் எனக்கு அனைத்தையும் விவரிப்பதாக கூறினாய் அல்லவா, இப்போது சொல் இங்கு என்னதான் நடக்கிறது.”

“பிரம்பஞ்சத்தின் பிறப்பு பற்றி பல வாதங்கள் இருக்கிறது உங்களுக்கு அதை பற்றி  தெரியுமா?”


“நான் கேள்வி கேட்டால் அதற்கு பதிலாக இன்னொரு கேள்வியா, நான் ஒரு சாதாரண மனிதன், ஒரு விஞ்ஞானியை போல் என்னிடம் பேச வேண்டாம், என் நிலமையில் நீ இருந்து யோசித்துப்பார். எனக்கு தெரியவேண்டியதை மட்டும், அதாவது, ராமானுஜத்தை துப்பாக்கியால் சுட்டது யார், பார்பதற்கு என்னுடைய மூதாதயரான அருண்மொழிவர்மனின் குரு போல தொற்றமளிக்கிறார். அது உண்மையென்றால் அவரால் எப்படி இங்கு வர முடியும், அப்படியென்றால் கால இயந்திரம் என்று ஒன்று கண்டிப்பாக உள்ளதுதானே?”

“நீங்களும் ஒரு விஞ்ஞானி மாதிரிதான் இவ்வளவு விவரமாக பேசுகுறீர்கள், நீங்கள் பார்த்தது அருண்மொழிவர்மனின் குருவா என்பது எனக்கு தெரியாது, ஆனால் அவரின் பயணம் கால இயந்திரம் மூலம்தான் என்பதை மட்டும் நான் அறிவேன்.”

“கால இயந்திரமா? அப்படியென்றால் அவர் யார், அவரை எப்போது நான் தடுத்தேன், கடவுளாக போகிறேன் என்று சொல்கிறாரே அவர் என்ன பைத்தியமா ?

“இவ்வுலகத்தின் எதிர்காலத்தை கணிக்கும் இல்லை இல்லை தீர்மானிக்கும் சக்தி இருப்பவர் கடவுள் என்றால் அது அவர்தான்.”

“அப்படியென்றால் எப்படியும் அவரிடமிருந்து நம்மால் தப்பிக்க முடியாது அல்லவா, எதற்கு இந்த வீண் முயற்சி.”

“அந்த சக்தியின் மையம் அருண்மொழிவர்மனால் தான் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால்தான் உன் மரபணு நினைவுகள் மூலம் அந்த இரகசியத்தை அறிய முயல்கிறோம்.   அருண்மொழிவர்மனுக்கு பிறகு யார் அந்த சக்தியை அடைந்தார்கள், ஏன் இவ்வளவு காலம் காத்திருக்கிறார்கள் போன்ற பல கேள்விகளுக்கு உன் ஒருவன் மூலமே பதில் கிடைக்கும் என்று நம்பினோம். ”


 “உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும். என்னுடைய கடந்தகால நினைவுகள், அதாவது என்னுடைய இப்பிறவி நிகழ்வுகள் சுத்தமாக நினைவில் இல்லை, உங்கள் கழகத்தில் பிடிபடுவதற்கு முன்பு என்ன செய்துகொண்டிருந்தேன், நீங்கள் என்னை ரவி என்று அழைத்த பின்புதான் என் பெயர் தெரிந்தது.அது போல் இப்போது உன்னிடம் பேசும்போது மட்டும் என்னிடம் ஒரு வகை உணர்வு, எப்படி சொல்வதென்று தெரியவில்லை, ஆனால் உன்னை இதற்கு முன் எங்கேயோ பார்த்ததாக நினைவிருக்கிறது ஆனால் எங்கு என்று மட்டும் புலப்படவில்லை.”

“ம்.. இனி மறைத்து எந்த பயனும் இல்லை, ரவி இந்த ஆய்விற்கு உன்னை ஈடுபடுத்தும் முன்பு உன்னுடைய இப்பிறவி நினைவுகளை தவிர்த்தால் மட்டுமே கடந்த கால மரபணு நினைவுகளை எங்களால் பதிவு செய்ய முடியும், அதனால் மூளையின் அரிதாக பயண்படுத்தப்படும் பகுதிகளுக்கு உன்னுடைய இப்பிறவி நினைவுகள் சேமிக்கப்பட்டுள்ளது, அந்த நினைவுகளை பற்றி பிறர் பேசும்போது அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதனால்தான் உன்னை ரவி என்று கூப்பிடும்போது நீயும் ஆமோதித்தாய். ஆய்வகத்தில் இருக்கும்போதும் உன்னுடம் சரியாக பேசாமல் இருக்க காரணம் உனக்கும் எனக்கும் உள்ள உறவு”

திவ்யா ரவியிடம்  நிழற்படத்தை காண்பிக்க அதில் இருவரும் ஜோடியாக சிரித்துக்கொண்டிருந்தனர்.


தொடரும்.. tbc..

பி.கு, இவையாவும் கற்பனையே..

No comments:

Post a Comment