Wednesday, 12 October 2011

"எ"ஆம் அறிவு: அத்தியாயம் 5: பிரளயம்குருவின் ஆணைப்படி அனைத்து செயலகளிலும் ஈடுபட்டான் அருண்மொழிவர்மன், தன் உடன்பிறந்தவர்கள், படைத்தலைவர்கள், அடுத்த தலைமுறை வாரிசுகள் என அனைவரையும் களைப்பறித்தான், அவன் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களை தேர்ந்தெடுத்து அனைத்து முக்கிய துறைகளிலும் அமர்த்தினான். ராஜ்ஜியத்தில் இவ்வளவு நடந்தும் உத்தமன் ஒரு பொம்மை அரசனைப்போல் எதையும் கண்டுகொள்ளாமல் ஆட்சிபுரிந்துக்கொண்டிருந்தான்.குருவை காண சென்றுக்கொண்டிருந்தான் அருண்மொழிவர்மன், குதிரையை செலுத்திக்கொண்டிருந்த பொழுது திடீரென விழுந்த மரக்கிளையில் சிக்கி தூக்கி எறியப்பட்டான், தலையில் அடிப்பட்டதால் வழி ஓரத்தில் அப்படியே மயங்கி விழுந்தவன் சிறிது நேரத்திற்கு பின் மயக்கம் தெளிந்து அருகிலிருந்த ஓடையில் முகம் கழுவி சிறிது நீரை பருகினான்.

அவ்வழியாக புலிச்சின்னம் பொறித்த பல்லக்குடன் சென்ற வீரர்களை கவனித்தான், அவர்களை இடமறித்து,”இங்கு எங்கே செல்கிறீர்கள், பல்லக்கில் இருப்பது யார்” என வினவினான்.

திகைத்து நின்ற வீரர்களை ஒதுக்கிவிட்டு பல்லக்கின் திரையை விலக்கினான். சிறிது காலத்திற்கு முன்பு அவன் கொலை செய்த தெற்கு சோழ மண்டலத்தின் படைத்தலைவரின் உடல் இருந்தது.

“நீங்கள் இப்படி அமைதியாக இருந்தால் அனைவரின் தலையும் துண்டிக்கப்படும், ம்.. சொல்லுங்கள்” என மிரட்டினான்.

“மன்னித்துவிடுங்கள் இளவரசரே, காட்டில் இருக்கும் ஒரு முனிவர் எங்களிடம் அவ்வப்பொழுது சில இடங்களை சொல்லி அங்கிருந்த இறந்த உடல்கலிருந்து சில பொருட்களை எடுத்துவர சொல்வார், சில நேரம் வெறும் ரத்த மாதிரியையும், சில நேரம் வெறும் மயிரையும் எடுத்துவர சொல்வார், அதற்கு நல்ல சன்மானமும் கொடுப்பார்.” என பயந்தபடி கூறினர்.

அவர்கள் கூறிய அடையாளத்தின் படி இவர்களை வேலை வாங்கியது தன் குருதான் என்பதை தெரிந்து கொண்டான். அந்த நிகழ்விற்கு பிறகு சற்று குழப்பத்துடன் காணப்பட்ட அருண்மொழிவர்மன், தன்னை சுற்றி  நடக்கும் விஷயங்கள் சற்று யோசித்தால் சிறிதும் புலப்படவில்லை என்பதை அறிந்தான். தன்னை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் அந்த குருவை பற்றி யோசித்து பார்க்கையில் இன்னும் குழம்பினான், எப்பொழுதிலிருந்து இவருடன் பழக்கம் ஏற்பட்டது,  இவர் யார்? அவருடைய அடிமைபோல் செயல்பட என்ன காரணம், , ஒருவேளை இவர் எதிரி நாட்டு மந்திரவாதியா, தன்னை வசியப்படுத்தி இந்த சோழ சாம்ராஜ்ஜியத்தையே அழிக்கப்பார்கிறவரா, போன்ற பல கேள்விகள் எழுந்தன, இன்று அதற்கு ஒரு முடிவை எடுத்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் குதிரையை வேகமாக செலுத்தினான்.


“வா அருண்மொழிவர்மா, நமது திட்டம் எவ்வாறு சென்றுக்கொண்டிருக்கிறது”

“நீங்கள் சொன்னபடி அனைத்தும் செய்துகொண்டிருக்கிறேன்.” என கூறிய அருண்மொழிவர்மனை பார்த்து,

“என்னிடம் ஏதோ கேட்க வேண்டும் என நினைப்பது போல் இருக்கிறதே? உன் மனதில் இருப்பதை சொல்”

“ஒவ்வொரு முறை நீங்கள் சொல்லும் ஆட்களை நான் கொலை செய்த பின் அவர்களுடைய பிரேதத்தை எடுக்க தனியாக ஆட்களை அனுப்புகுறீர்கள், உங்களை குருவாக நான் எப்போது தேர்ந்தெடுத்தேன், என் நினைவில் உள்ளவரை நீங்கள் யார் என்ற விஷயத்தை என்னிடம் சொன்னது கிடையாது, உங்களை பற்றிய நினைவுகள் என் மனதில் துளிகூட இல்லை, உங்கள் கட்டளைப்படி அடங்கும் நாய் போல என்னை மாற்றிவிட்டீர்கள், நீங்கள் யார்?”

“என்னை கேள்வி கேட்கும் அள்விற்கு வளர்ந்துவிட்டாயா?”

“உங்களை கேள்வி கேட்கவில்லை, இது என் கட்டளை, பதில் சொல்லுங்கள், நீங்கள் யார், நான் இவ்வளவு கொலை செய்ததற்க்கு உண்மையான காரணம் என்ன, இறந்தவர்கள் அனைவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன, இனிமேல் என்னை ஏமாற்ற முடியாது.”

“அனைத்தும் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது, ஆம் நீ கொலை செய்த அனைவரும் ஒரு கழகத்தை சேர்ந்தவர்கள், இந்த உலகத்தை தங்களுக்கு கீழ் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டவர்கள், அவர்களிடம் அதற்கான பொறி உள்ளது. கால ஓட்டத்தில் முன் சென்று அங்கிருக்கும் நவீன ஆயுதங்களை கைப்பற்றி அதன் மூலம் இவ்வுலகை அடிமைப்படுத்த நினைக்கிறார்கள். இப்பொழுது உன்னுடைய எதிர்கால தலைமுறையினரைக் கண்டுபிடித்து அவர்களின் மரபணு நினைவுகள் மூலம் நம்முடைய திட்டத்தை கண்டறிந்து நம்மை அழிக்க நினைக்கின்றனர்.”

“நீங்கள் சொல்வது அனைத்தும் புதிராக இருக்கிறது, அப்படியே அவர்களிடம் காலத்தை கடக்கும் பொறி இருந்தாலும் அது எப்படி உங்களுக்கு தெரியும், இல்லை இவைஅனைத்தும் என்னை ஏமாற்ற நீங்கள் சொல்லும் கதையாகவும் இருக்கலாம், எதுவும் நம்பும்படியில்லை.”

“யாராக இருந்தாலும் சந்தேகம் வரும், அந்த பொறியைக் கண்டுபிடித்தவன் என்ற முறையில் அதனால் ஏற்படும் ஆக்கத்தையும், அழிவையும் நேரில் பார்த்தவன் நான்”

“என்ன! நீங்கள் கண்டுபிடித்ததா?” ஆச்சரியத்துடன் கேட்டான் அருண்மொழிவர்மன்.

“ஆம் என் கண்டுப்பிடிப்பை திருடிக்கொண்டு அதன் மூலம் இவ்வுலகை தனக்கு அடிமையாக்க நினைக்கிறான் என் பழைய உதவியாளன்.”

“அவன் யார், அவனின் இந்த தீய செயலை நிறுத்த வேண்டும், அவனைப்பற்றி முததில் சொல்லியிருந்தால் என் வாளுக்கு இரையாக்கிருப்பேனே..”

“அவன் தீயவனாக இருந்தாலும் புத்திசாலி, நீ அவனை கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருக்கிறான்.”

“அந்த கவலை உங்களுக்கு வேண்டாம், அவன் பெயரை மட்டும் சொல்லுங்கள், இவ்வுலகில் எங்கிருந்தாலும் அவனைக்கண்டுபிடித்து உங்களிடம் ஒப்படைக்கிறேன்.”

“அவன் பெயர் ராமானுஜம், அவன் இருப்பது இதே இடத்தில்தான் ஆனால்…”


”என்ன தயக்கம், சொல்லுங்கள்”

“எதிர்காலத்தில்”


தொடரும்.. tbc..


No comments:

Post a Comment