Sunday, 12 August 2012

இராவணன்

வருடம் 1985.

அந்தமான் தீவில் உள்ள அந்த  பெயர் தெரியாத  இடத்தின் நிசப்த்தாமான சூழலை பறவைகளின் கூட்டம் கலைக்க,மலை அருவிகளில் இரை தேடிக்கொண்டிருந்த மிருகங்கள் தங்களுக்கும் பறக்கும் சக்தி இல்லையே என்று சோகமாக அவைகளை பார்த்துக்கொண்டிருந்தன. ஒரு சிறிய நகரத்தின் பரப்பலவை கொண்ட அந்த தீவின் நடுவே உள்ள எரிமலை தன் பங்கிற்க்கு பெறுமூச்சாக புகையை கக்கிக்கொண்டிருந்தது. அடர்ந்த காடுகளின் நடுவே இருக்கும் அந்த தீவு அப்போதய இந்திய வரைப்படத்தில்  இடம்பிடிக்கவில்லை. அந்த இடத்தை சரியாக பயண்படுத்திக்கொண்ட சில சமூக விரோதிகள் அவ்விடத்தை தங்கள் பாதுகாப்பு அரணாக மாற்றி கஞ்சா பயிரிட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு ஒரு நிழல் சாம்ராஜ்ஜியத்தையே பல்வேறு நாடுகளில் நடத்தி வந்தனர். அந்த பணத்தின் உதவி கொண்டு பல அரசியல்வாதிகள் விலைக்கு வாங்கப்பட்டனர்.  இந்திய புவியியல் துறையிலிருந்த சில கருப்பு ஆடுகளின் உதவியுடன் அவ்விடம் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியாக அறிவிக்கப்பட்டு சாதாரண மக்களின் வருகையிலிருந்து தவிர்க்கப்பட்டது.

"வேலை முடிந்தது" வாக்கி டாக்கியில் தகவலை சொன்னார் இரகசிய ஏஜென்ட் வினோத்.

"நல்ல வேலை செய்தாய், எதிரிகள் பார்பதற்க்கு முன் உடனடியாக தீவின் மேற்க்கு பகுதியில் உள்ள கடற்கரைக்கு நீ கைப்பற்றிய ஆவணங்களுடன் வந்து விடு, அங்கு தயார் நிலையில் மோட்டார் படகு இருக்கும், அதன் உதவியுடன் கரையிலிருந்து பத்து மைல் தொலைவில் இருக்கும் நடுக்கடலுக்கு வந்துவிடு. அங்கு  உனக்காக விமானத்தில் காத்துக்கொண்டிருக்கிறோம்" எனக்கூறினார் அந்த அந்த இரகசிய போலிஸ் குழுவின் தலைவர்.

"நேரம் இன்னும் இருக்கிறது, இவ்வளவு தூரம் வந்ததற்க்கு இது மட்டும் போதாது, சிறிது விளையாடிவிட்டு வருகிறேன்" என்ற பதிலுக்கு "உன் ஆண்மையை காட்ட இது நேரமில்லை உடனடியாக அங்கிருந்து வெளியேறு, இந்த படையை சமாளிக்கும் அளவிற்க்கு நம்மிடம் போதிய பலம் இல்லை" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசையை அவர்கள் பார்த்த போதை மருந்துகளின் கிடங்குகள் ஒன்றிலிருந்து புகை அத்தீவிலிருந்த எரிமலைக்கு போட்டியாக புகையை வெளியிட்டுக்கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் எஜென்ட் வினோத் கடற்கரைக்கு வந்தடைந்தார். அங்கு மறைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய மோட்டார் படகில் ஏறி நடுக்கடலை நோக்கி செலுத்தினார். அங்கு அவருக்காக ஒரு மிதக்கும் கப்பலில் குழுவின் தலைவர் காத்துக்கொண்டிருந்தார்.

"இது தான் இரகஸிய போலிஸின் வேலையா?" சற்று கோபத்துடன் கூறினார்  அந்த இரகஸிய போலிஸ் தலைவர் எஜென்ட் சங்கர்.

சற்று நேரத்தில் அவ்விமானம் கடலின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு மேலே பறந்தது.

"ஹும், கண்னைக் கட்டிக்கொண்டிருந்து இந்த வேலையை செய்திருக்கலாம் அப்போதாவது சற்று சுவாரஸியமாக இருந்திருக்கும்" சிரித்துக்கொண்டே தான் கைப்பற்றிய ஆவணங்களை கொடுத்தார் எஜென்ட் வினோத்.

"ஏஜென்ட் வினோத், உண்மையாகவே நீ ஒரு மாவீரண்தான், ஆனால் உன் உடலில் உள்ள பலத்திற்க்கு ஈடாக உன் மூலையால் செயல்படமுடிவதில்லை, எப்படியோ நீ செய்த வேலைக்கு நன்றி எனக்கூறிக்கொண்டே தன் கையிலிருந்த துப்பாக்கியைக் கொண்டு தலையில் தாக்கினார் ஏஜென்ட் சங்கர். பத்தாயிரம் அடியில் பறந்துக்கொண்டிருந்த விமானத்திலிருந்து வினோத்தின் உடல் எஜென்ட் சங்கரின் உதவியாளர்களால் வங்கக்கடலில் வீசப்பட்டது.

வருடம் 1995. சென்னை சி.பி.சி.ஐ.டி தலைமை அலுவலகம்


"எங்க அப்பாவை கொலை செய்தது தீவிரவாதிங்க கிடையாது, நம்ம இரகஸியத்துறையில் வேலை செய்த ஒருவர்தான். ஒரு மிகப்பெரிய சதித்திட்டத்தின் விளைவால்தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த சதிக்கு காரணமானவர்கள்  இன்னும் இங்கே வேலை செய்து கொண்டிருக்கலாம்." என்று கூறினான் இராமன், ஏஜென்ட் வினோத்தின் மகன்.

" நான் சொல்வதை கேள், உன் அப்பா இங்கில்லாதது  இத்துறைக்கு ஒரு மிகப்பெரிய இழப்பே, அதற்க்காக இத்துறையில் வேலை செய்யும் ஒருவரை நீ குற்றச்சாட்டுவதற்க்கு மிகப்பெரிய செயல். உன் விசாரனையை குறை சொல்லவில்லை, அதற்க்கு ஈடான சாட்சி உன்னிடம் உள்ளதா?" எனக்கூறினார் தலைமை செயலாளர் கனேசன்.

"இருக்கிறது" ஆனால் அது இராவணின் உதவி மூலம் தான் நமக்கு கிடைக்கும்.

"உன் உடன்பிறந்த தம்பி இராவணனா?"
ஆச்சரியத்துடன் கூறினார் கனேசன்.


தொடரும்......


பிகு.

வழக்குத்தமிழில் எழுத மிகவும் சிரமமாக உள்ளதால், கதையில் உள்ள அனைவரும் சரியான தமிழில் பேசுவது போல் எழுதியுள்ளேன். சாரி :)

Thursday, 21 June 2012

லீவ் லெட்டர்-1


லீவ் லெட்டர் -1

எவ்வளவு பெரிய உத்தமனா இருந்தாலும் கிட்டதிட்ட எல்லோரும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம் இந்த லீவ் (அ) பொய் லெட்டர் எழுதுவது.

பத்தாம் வகுப்பு வரை ஸ்கூல் விட்டா வீடு என்று இருந்து விட்டு, பதினொன்றாம் வகுப்பில் இருந்து ஆரம்பிக்கும் ஸ்பெஷல் கிளாஸ் டியுஷன் போன்ற எக்ஸ்ட்ரா கிளாஸை நமக்கு சாதகமாக பயண்படுத்திக்கொள்வது.
குழந்தைகள் தினத்தன்று வெளியாக இருக்கும் அந்த படத்தை பார்ப்பது என்று முடிவானது, எங்கள் செட்டின் தலைவர் ஆறு டிக்கெட்டுகளை முதல் நாள் மேட்னி ஷோவிற்கு முன்பதிவு செய்துவிட்டார், வழக்கமாக அரைநாள் லீவ் விடும்  எங்கள் பள்ளி அந்த வருடம் முதல் பளஸ் 1 பளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் பள்ளி முழு தினமும் இயங்கும் என்ற கொடுஞ்ச்செய்தியை சர்குலரில் அனுப்பியது. முதல் முறையாக சத்தியம் தியேட்டரில் வேறு புக் செய்திருந்தோம், என் ஒரு மாத பாக்கெட் மணியை சேமித்து வைத்த காசு, இதை சும்மா விட கூடாதென்று முடிவு செய்து ரிஸ்க் எடுக்க தயாரானோம்.

ஆறு பேர் ஒன்றாக சென்று லீவ் லெட்டர்  கொடுத்தால் கண்டிப்பாக மாட்டிக்கோள்வோம் என்பதால் லீவ் அப்பிலிக்கேஷன் கொடுப்பதாக முடிவாயிற்று, ஒரே காரணம் இல்லாமல் எல்லோரும் வேறு காரணத்திற்காக லீவ் எடுப்பதாக பேசி வைத்து அனைவரும் எழுதினோம். கண் பரிசோதனை, கல்யாணம், கோயிலுக்கு செல்வது போன்ற காரணங்களுக்கு மத்தியில், என்னிடம் வந்த என் அப்பிளிக்கேஷனை பார்த்து காப்பி அடித்த தலைவர், "கவலபடாத மச்சி, ஃபார்மேட்தான் பார்க்குறேன் கண்டன்ட் மாத்தி எழுதிடறேன் " என்று கூறிய தலையை நம்பியது தவறு என்று அப்போது தெரியவில்லை.

எங்கள் நல்ல நேரம் பிரின்சிபல் விழா ஒத்திகைக்கு சென்றிருந்ததால் லீவ் அப்பிலிக்கேஷனை டேபிலில் வைத்து விட்டு வந்து விட்டோம். ப்ளான் படி  எல்லாம் ஸ்கூல் செல்லும்வரை நடந்தது. அசெம்பளி முடிந்து கிளாசிற்க்கு செல்லும் போது எங்கள் ஆறு பேரின் பெயரை கூறி பிரின்சிபால் ரூமிற்க்கு அழைத்துச்சென்றார் பியுன். சரி லீவை பற்றி கேட்கத்தான் போகிறார், நாம்தாம் அப்பிலிக்கேஷனை முன்பே வைத்துவிட்டோமே ஒரு பிரச்சனை இல்லை என்ற தைரியத்துடன் கிளம்பினோம்

பிரின்ஸிபால் ரூம்.
பி- எதுக்காக நீங்க நேத்து லீவ் போட்டீங்க, காரணத்த எல்லாரும் தனி தனியா  சொல்லுங்க. கையில் நாங்கள் கொடுத்த லீவ் அப்பிலிக்கேஷனுடன்.
1. ஐ செக்கப்
2.கல்யாணம்
3.கோவில்
4.பல் டாக்டர்
5.கோவில்
6. எங்கள் தல நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு "ஸ்டொமக் ஏக்"
அனைவருக்கும் பகீர் என்றது.

அவன் கொடுத்த லெட்டரை திரும்ப அவனிடமே கொடுத்து படிக்க சொன்னார்
"as i will be suffering from sever stomach ache tomorrow, please grant me leave" என்று படித்துக்கொண்டிருந்த போதே நாங்கள் அனைவரும் தவறை  ஒப்புக்கொண்டோம். ஒரு வாரம் அவுட்ஸ்டாண்டிங் ஸ்டுடெண்ட்ஸ், இம்போஷிஷன், எல்.கே.ஜி டீச்சர் முதற்கொண்டு அனைவரிடமும் திட்டு மற்றும் அட்வைஸ் என எல்லாவற்றை பொறுத்துக்கொண்ட எங்களால் அந்த ஒன்றை மட்டும் மட்டும் மறக்க முடியாது.

இவ்வளவு கஷ்டப்பட்டு நாங்கள் பார்த்த அந்த வரலாற்று சிறப்பு மிக்க காவியம்.
.

.
.
.
..
.
.
.
.
.
.


.


லீவ் லெட்டர்கள் பல தொடரும்..
Sunday, 3 June 2012

எனக்குள் ஒரு கலைஞர்எனக்குள் ஒரு கலைஞர்.

சிறு வயது முதல் அரசியலை பொறுத்தவரை என் ஹீரோ கலைஞர் என்று அழைக்கப்படும் மு.க. கருணாநிதிதான். எனக்கு நினைவு தெரிந்த நாளில் தமிழ்நாட்டின் முதல்வராக செல்வி ஜெயலலிதா இருந்தார். எங்கள் வீடு அண்ணாசாலை என்றழைக்கப்ப்டும் மௌண்ட் ரோடில் இருந்தது, ஒவ்வொறு முறை முதல்வர் அச்சாலையை கடக்கும் போது எப்போதும் பரபரப்பாக இருக்கும் சாலை பந்த் தினத்தை போல் காட்சியளிக்கும். அவர் வளர்ப்பு மகன் திருமணம் பற்றி சொல்லத்தேவையில்லை.

சரி நீ இப்ப சொன்னது எதுவுமே தேவையில்லாத விஷயம்தாம்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது, இது என்னோட சொந்த கருத்துதான், "திமூக்க அனுதாபிகள் தொட்டதொன்னூறுக்கும் செயலலிதாவையே மூக்காவுக்கு கம்பேர் பண்ணுறது கொடும! ஏன்யா ! நீங்களே அந்தாள கேவலப்படுத்திட்டு!" ராஜன் மாதிரி சொல்றவங்களுக்கு அப்ப கலைஞர யார் கூடபா ஒப்பிடறது, ஊரே குருடனா இருந்தா ஒன்ற கண்ணந்தான் தலைவன்.. அவருக்கு பொறவு  தமிழ்நாட்ட யாரு காப்பாத்துறது:)

சூப்பர் ஸ்டார் ரஜினி வாய்ஸ்லாம் கொடுத்தபோது அடுத்த முதல்வர் தேர்தல்லுல அவர் நிப்பார்னு வோட்டு போடு தயாரா இருந்த என் போன்ற ஆட்களுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. நல்ல வேளை அவர் அரசியல் பக்கம் வரல, வீட்டு அரசியலே அவருக்கு மண்ட காயுது, சரி வேற யாருக்கு சப்போர்ட் பண்ணலாம்னு பார்ப்போம், முதல்வர் பதவிக்கு போட்டி போடும் அளவிற்க்கு தகுதியுடைய மற்ற கட்சினு பார்த்தா
அ.தி.மு.க. மட்டும் தான்.
தே.மு.தி.க, பாமாக, சமுக மதிமுக போன்ற ஒட்டுன்னிகள்.
காங்கிரஸ், பா.ஜ.க, கம்முயுனிஸ்ட் போன்ற தேசிய கட்சிகள் எப்படி தமிழ் நாட்டை ஒரு மாநிலமா மதிக்கலையோ அதே மாதிரி இங்க அந்த கட்சிகளுக்கு இப்ப மதிப்பில்லை

சே ஏதெதோ எழுதிட்டு போறேன், மத்த ஊர்களை பற்றி தெரியவில்லை ஆனால் சென்னையில் பல பாலங்கள், பூங்காக்கள், நூலகம் போன்றவைகளை கட்டுய கலைஞர் என்று சொல்வது பொய் இல்லை, நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை என்று போஸ்டர் ஒட்டுபவர்களை பார்க்கும் போது இவர் எவ்வளவோ பரவாயில்லை. வோட்டு போடும் வயசு வந்ததும் நான் தி.மு.கவிற்கு ஓட்டு போட்டேன். சைதாப்பேட்டை தொகுதி தி.மு.கவின் கோட்டை என்றழைக்கப்பட்ட இடம் நான் வாக்களித்த மூன்று தேர்தலிலும் தோல்வியை தழுவியது. கடைசி தேர்தலில் தி.மு.கவிற்கு என் வாக்கினை செலுத்தவில்லை.

பதிவ ஆரம்பிச்ச போது என்ன எழுத நினச்சேனோ அதப்பத்தி இன்னும்  ஆரம்பிக்கல, "when great power comes great responsibility" ஸ்பைடர்மேன் மாமா சொல்வார். அப்படி ஒரு பவர் இருக்கும் போது பொறுப்பு கொஞ்சம் அதிகமா தப்பான பக்கம் போவது யாராலும் மறுக்க முடியாது.

எங்க காலேஜ் சிம்போஸியம்ல நாங்க ஆட்டய போட்ட காசு இருபதாயிரம், சுமார் இரண்டு லட்சம் செலவு பண்ற கல்லூரி விழாவிலேயே பத்து சதவிகிதம் சுற்றமும் சூழ செலவு செய்யும்போது மற்றவர்களை பற்றி தவறாக பேசும் நாம் அனைவரும் கபடர்களே.

என்பத்தி ஒன்பது வருட வாழ்கையில் பல சிகரங்களை தொட்ட ஒரு மனிதனின் பிறந்தநாளில் அவரை வாழ்த்துகிறேன்.

பி.கு.

திட்றவங்க வெ.ம.ங்கற ஒரு புது வார்த்தை வந்திருக்கு.. புதுசு கண்ணா புதுசு.

Sunday, 8 January 2012

தலகோனா-திருப்பதி


“பாதை இல்லாத காடுகளில் ஒரு சந்தோஷம் உள்ளது, யாரும் இல்லா கரையில் பேரானந்தம் கிடைக்கிறது. என்னை தவிற மனிதர்கள் யாரும் இல்லாத சமுகம் ஒன்று இருக்கிறது, கடலுக்கு அடியில், மலை உச்சியில், இயற்கை எனும் சாம்ராஜ்ஜியத்தில் மரங்கள், விலங்குகள் ஆட்சி புரியும் அந்த இடம். நான் மக்களை வெறுக்கவில்லை, ஆனால் இயற்கையை பெரிதும் நேசிக்கிறேன்.”  - பைரன்.

தலகோனா,  தல –கோனா மலைகளின் தலைவன், திருப்பதி ஏழுமலைகளில் முதல் மலை, திருப்பதியில் இருந்து சுமார் ஐம்பது கி.மி தொலைவில் உள்ளது. சந்தன மரங்கள் மற்றும் அறிய காட்டு விலங்குகள் இருக்கும் இடம். தலகோனா நீர்வீழ்ச்சி விழும் நீர் எண்ணற்ற மூலிகைகளின் கலவையாகும், காட்டு வழிப்பாதைகள் நிறைந்த இந்த இடம் ட்ரெக்கிங் செல்பவர்களுக்கு ஏற்றது.


“டேய் நீ மட்டும் தனியா ட்ரெக்கிங் போயிட்டு வந்துட்டு ஃபேஸ்புக்ல போட்டு கடுப்பாக்குற, மரியாதையா எங்களையும் ஒரு தடவ கூட்டிட்டுபோ.”

“அடுத்த வாரம் இமாலய பயணம் செல்லப்போவதை பற்றி அப்போது யாரிடமும் சொல்லவில்லை, திருப்பதி பக்கத்தில் தலகோனா நீர்வீழ்ச்சியை பார்க்கலாம் என்று முடிவு செய்து ஞாயிறு காலை 7.30க்கு காரில் கிளம்பினோம். இது முதல் பயணம் என்பதால் கூகுள் மேப்ஸில் வழியை பார்த்து பிரிண்ட் எடுத்துக்கொண்டேன், இந்தியாவில் கூகுள் மேப்பை உபயோகிப்பது, அந்திரா மீல்ஸில் பிட்சா கேட்பது போல் இருந்தது. சிறிது தூரத்தில் பிரிண்ட் அவுட்டை தூக்கி வீசினேன். சரி ரேணிகுண்டா வரை சென்று அங்கிருந்து வழி கேட்டு செல்ல முடிவெடுத்தோம். வந்த நால்வரில் மூன்று பேருக்கு தெலுங்கு தெரிந்திருந்ததால் வழி கேட்பதில் எந்த பிரச்சனைனும் இல்லை, பத்துக்கும் மேற்பட்டவர்களின் உதவியுடன், தலகோனா செக்போஸ்ட் வந்து சேர்ந்தோம். காரில் எத்தனை வாட்டர் பாட்டில் இருக்கிறது என்று கேட்டு பாட்டிலுக்கு பத்து ருபாய் வாங்கிக்கொண்டனர், திரும்பி வரும்போது காலி பாட்டிலைக் காட்டி காசைத் திரும்பப்பெற்றுக்கொள்ளுமாறு கூறினர்,  பிளாஸ்டிக் குப்பைகளை கையாள இந்த யுக்தி எனக்கு பிடித்திருந்தது. எல்லா இடத்திலும் இதை நடைமுறைப்படுத்தினால் நன்றாக இருக்கும்.அங்கு விற்ற சப்போட்டா பழத்தையும், வறுத்த வேர்கடலையும் வாங்கிக்கொண்டோம்.

செக்போஸ்டிற்கு பிறகு சாலை சுமாராகத்தான் இருந்தது. இருபது நிமிடத்தில் தலகோனா பார்க்கிங் ஏரியாவில் வண்டியை நிறுத்தி அனைத்து சாதனங்களையும் வண்டியிலேயே விட்டு கிளம்பினோம். குரங்குகள் தொல்லையை தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை, ஞாயிறு என்பதாலும், மது வகைகளை உள்ளே எடுத்து செல்ல அனுமதி இல்லாததால் குடும்பத்துடன் நிறைய பேர் வந்திருந்தனர். குப்பைகளை அரிதாகவே காணமுடிந்தது.

அருவியிலிருந்து வரும் நீரை ஒரு குட்டை போல் தேக்கி வைத்திருந்தனர். மலை ஏற முடியாதவர்கள் இங்கேயே குளித்து விட்டு செல்லலாம். டிரெக்கிங் போல் இல்லாமல் அனைவரும் சிரமமின்றி ஏற சிமென்ட் கற்களாலும் கைப்பிடிகளாலும் வழி அமைத்திருந்தனர். அரைமணி நேர நடை பயணத்திற்க்கு பின்பு அருவி கொட்டும் ஓசை கேட்டது. நிறைய பேர் அங்கிருந்தனர், ஒரு மினி ஜாக் ஃபால்ஸ் போல இருந்தது. சுமார் 80 மீட்டர் உயரத்திலிருந்து தண்ணீர் அருவியாக வீழ்ந்துக்கொண்டிருந்தது. கீழே கூட்டம் அதிகம் இருந்ததால் இன்னும் சற்று மேலே சென்றோம், இப்போது பாதை  சற்று கடினமாக இருந்தது,  இங்கு எங்களை தவிர யாரும் இல்லை, இங்கு பாசிப்படிந்து மிகவும் வழுக்கலாக இருந்தது. வனத்துறை சார்பில் தடுப்புக்கம்பிகள் இருந்ததால் தைரியமாக அருவின் கீழ் சென்றோம், முதலில் யாரோ மேலே இருந்து ஐஸ் கட்டிகளை எறிவது போல் இருந்தது, திடீர் என தண்ணீரின் வேகம் அதிகரிக்க என் நண்பனொருவன் அங்கேயே வழுக்கி விழுந்தான், நல்லவேளை  பெரிதாக ஒன்றும் அடிபடவில்லை. அரைமணிநேர குளியலுக்கு பிறகு அங்கிருந்து கிளம்பினோம். மதியம் ஒன்றும் சாப்பிடாததால் எல்லோருக்கும் பசியாக இருந்தது. செக்போஸ்டில் காலி பாட்டில்களை காட்டி திரும்ப காசைப்பெற்றுக்கொண்டோம். சப்போட்டா இனிப்பாக இருந்ததால் மேலும் சிலவற்றை வாங்கினோம்.

பசி அதிகரிக்கவே கீழ் திருப்பதியில் உள்ள பீமாஸில் உணவருந்திவிட்டு சென்னைக்கு கிளம்பினோம். சென்னையில் இருந்து ஒரு நாள் பயணமாக காரில் குடும்பத்துடன் செல்ல ஏற்ற இடம். வழக்கமாக இதுபோன்ற நீர்வீழ்ச்சிகளில் பார்க்கும் போதை ஆசாமிகள் யாரும் இல்லை, படகு சவாரி, காட்டில் ஜீப் சவாரி, ஒரு நாள் தங்கி வர ஆசைபடுபவர்களுக்கு ஆந்திர பிரதேச சுற்றுலா கழகம் சார்பாக கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகை என அனைத்து தரப்பினர்க்கும் ஏற்றவாறு அமைந்துள்ளது இந்த தலகோனா நீர்வீழ்ச்சி. அங்கும் ஒரு பழமையான சிவன் கோவில் ஒன்று உள்ளது, காலை வீட்டை விட்டு கிளம்பும் போது “எங்கே போகிறாய்?” என அம்மா கேட்ட போது, "கோவிலுக்கு போகிறேன்" என்று சொன்னது நினைவிற்க்கு வந்தது.

பி.கு.
1. காரிலேயே போனை வைத்து விட்டதால் ஒரு புகைப்படத்தையும் நான் எடுக்கவில்லை.
2. மேலே உள்ள படம் நெட்டில் எடுத்தது.

Saturday, 7 January 2012

மீண்டும் ஒரு ஹவர் சைக்கிளின் கதை


முதல் மூன்று பத்திகள் முன்பே எழுதியது, ஏற்கனவே படித்த அந்த பத்து பேர்(கொஞ்சம் அதிகமா சொல்றேனோ.:)) நேராக நாங்காம் பத்திக்கு சென்றுவிடவும்.  
சைக்கிள் ஒட்ட தெரியாது என்றால் முகப்புத்தகத்தில் அக்கவுன்ட் இல்லை என்பது போல, என் வீடு மௌன்ட் ரொடில்(அண்ணாசாலை) இருந்ததால் அப்பா சைக்கிள் ஓட்ட சொல்லிக்கொடுப்பதில்லை, வருடமொருமுறை அத்தை வீட்டிற்கு கொளத்தூர் செல்லும் பொழுது ஹவர் சைக்கிள் எடுத்து மாமாவின் உதவியுடன் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.

அப்பொழுது நான் 5ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன், என் அத்தைக்கு இரண்டு பெண்கள், அரையாண்டு விடுமுறைக்கு அத்தை வீட்டிற்க்கு சென்றபோது, அங்கே மூத்தவள் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தாள்,  வெட்கமாய் இருந்தது, அன்றே மாமாவிடம் சொல்லி சைக்கிள் வாடகைக்கு எடுத்து ஓட்ட ஆரம்பித்தேன், ஓட்டுவதென்றால் காலை இருபுறமும் கீழே வைத்து தள்ளிக்கொண்டிருந்தேன்,கொளத்தூர் சாலைகலை பற்றி சொல்லத்தேவையில்லை,  கீழே இருந்த பாறையில் பட்டு கட்டைவிரல் நகம் பெயர்த்துக்கொண்டது, காலில் இருந்த இரத்தததை பார்த்து பயந்து விட்டனர், ஒரு வார இராஜவாழ்க்கையென்றாலும் சைக்கிள் ஓட்டுவது எட்டாக்கனியானது.

அண்ணாசலையிலிருந்த வீட்டை விற்றுவிட்டு, இராஜ்பவன் அருகே குடிபெயர்ந்தோம், பக்கத்தில் திடல் இருந்ததால் வார இறுதியில் சித்தப்பாவை அழைத்துக்கொண்டு ஒருவழியாக சைக்கிள் கற்றுக்கொண்டேன். பிறகு என் பொழுதுபோக்கு சைக்கிள் ஓட்டுவது மட்டுமே, பள்ளியில் இருந்து வந்தவுடனே, ஐந்து ருபாய் எடுத்துக்கொண்டு ஹவர் சைக்கிள் கடைக்கு ஓடுவேன், தாமதமாக சென்றால் ஓட்டை சைக்கிள்தான் கிடைக்கும், கொக்கு சைக்கிள் ஒரு மணி நேரத்திற்க்கு மூன்று ருபாயும், சாதா சைக்கிள் இரண்டரை ருபாய்க்கும் கிடைக்கும். ஐம்பது பைசாவின் அருமை அறிந்த காலம். பின்பு அப்பாவிடம் கெஞ்சி பரிட்சையில் நல்ல மதிப்பெண் வாங்கி என் முதல் சைக்கிள் வாங்கினேன். mtb hercules என் முதல் சைக்கிள், நான் கடைசியாக பயன்படுத்திய சைக்கிள், .BSA-slr சும்மா பறக்கும்.சுமார் ஐந்து வருடங்களுக்கு பின் சைக்கிள் ஓட்டும் ஆசை துளிர் விட்டது.  புது சைக்கிள் வாங்கலாம் என்றால், ஒரு நாள் கூத்திற்க்கு ஏண்டா இவ்வளவு செலவு செய்கிறாய் என்றாள் அம்மா. எதையும் கேட்காமல் நேராக சைதாப்பேட்டையில் இருக்கும் பாலாஜி சைக்கிள் கடைக்கு சென்றேன். இரண்டாயிரம் கொடுத்து வாங்கிய சைக்கிள் இப்பொழுது மூவாயிரத்தி ஐநூறு ருபாயாகியிருந்தது. இது எனக்கே சற்று அதிகமாக இருந்ததால் பழைய சைக்கிள் ஏதாவது இருக்கிறதா என்று கேட்ட பொழுது ஐந்தாயிரம் ருபாய்க்கு ஒரு சைக்கிள் இருப்பதாக காட்டினார். பார்க்க இஞ்சின் இல்லா டிவிஎஸ் போல இருந்தது. கடையை விட்டு நடையை கட்டினேன்.

சரி சிறுவயது ஹவர் சைக்கிள் கடை ஞாபகம் வர அங்கே சென்று பார்த்த பொழுது அதற்கான சுவடே இல்லை, கடையை பற்றி விசாரிக்கும் பொழுது “ஊருக்கு புதுசா?” என்ற தோரனையில்  அனைவரும் என்னை பார்த்தனர்.

முகப்புத்தகத்திலு, டிவிட்டரிலும் என் ஆசையை பகிர கல்லூரி நண்பனின் உதவியுடன் ராயபேட்டை நியு காலேஜை அடுத்து ஒரு ஹவர் சைக்கிள் கடையில் ஒரு சைக்கிளை வாடகைக்கு எடுத்தேன். தாத்தா சைக்கிள் என்று அழைக்கப்படும் பெரிய சைக்கிளே கிடைத்தது. நண்பனின் நண்பனுடைய வீட்டிற்கு கீழ் கடை இருந்ததால் முன்பணம் எதுவும் கொடுக்கவில்லை, ஒரு நாளுக்கு ருபாய் 25 என பேசப்பட்டது. குறைந்தது இரண்டுவாரமாவது வைத்திருப்பேன் என்ற உறுதிமொழியுடன் முதல் பயணமாக ராயபேட்டையிலிருந்து கிண்டிவரை சைக்கிளை மிதித்தேன். சைக்கிள் ஓட்டும் ஞாபகம் இல்லாமல் ஜெமினி மேம்பாலத்தில் ஏற சற்று சிரமத்துடன் நீண்ட நேரம் காத்திருந்து நுங்கம்பாக்கம் செல்லும் வண்டிகளிலிருந்து பிரிந்து பாலத்தை கடந்தேன்.


பல நாட்களுக்கு பிறகு சென்னையில் சட்டை முழுவது வியர்வையால் நனைந்தது. சைக்கிள் ஓட்டும் பொழுதுதான் சென்னையில் இன்னும் பலரது வாழ்வில் சைக்கிளே இன்னும் ஓடிக்கொண்டிருந்தது. சைக்கிள் ஓட்டும் எவரிடமும் தொப்பை இல்லை, அனைவரும் உடைகளை பார்க்க கீழ் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் போல் இருந்தாலும் அவர்கள் உடல் வலமாக இருந்தது. தன் மனைவியை பின்னாலும், குழந்தையை முன்னாலும் உட்காரவைத்து வியர்வை விருவிருக்க சென்றவரை பார்க்கும்பொழுது சற்று பொறாமையாகவே இருந்தது. ஹோண்டா சிட்டியில் ஒப்பனையுடன் இருக்கும் தன் மனைவியை அழைத்துசெல்லும் டை அடித்தவர்களை பார்க்கும் பொழுது ஏற்படாத உணர்வு.

சைக்கிளும் அம்மிக்கல்லும் மறைய மறைய இயற்கையாகவே ஆண்களிடத்திலும் பெண்களிடத்திலும் சோம்பேறித்தனமும் தேவையில்லாத கொழுப்பும் சேரத் துவங்கிவிடும். பிறகு மாதம் ஆயிரக்கணக்கில் ஸ்டாண்ட் போட்ட சைக்கிளை ஓட்ட செலவு செய்கிறோம்.


சைக்கிள் வாடகைக்கு எடுத்து  முதல் மூன்று நாள் ஓட்டியதோடு சரி, அப்படியே இரண்டு வாரம் வீட்டில் சும்மாவே இருந்தது. சரி எப்படியும் 500 ருபாய் செலவுசெய்யப்போகிறோம் கடைசி நாளாவது ஓட்டலாம் என்ற எண்ணத்துடன் மிதிக்கத்துவங்கினேன். ஐ-பாட்  உதவியுடன் முதல் நாள் 16கி.மி சென்னையை பாதி சுற்றினேன். சைக்கிள் ஓட்டும் போதையில் அடுத்த நாள் சுமார் 22 கி.மி தாண்டி ஓட்டிக்கொண்டிருந்த பொழுது சென்னை எல்.ஐ.சி அருகே பஞ்சர் ஆனது. இரவு 8.30 என்பதாலும் அண்ணாசாலை என்பதாலும் ஒரு கடையும் திறக்கவில்லை, அப்பறம் வழியில் இருந்த கடைக்காரரிடம் கேட்ட பொழுது இங்கு எதுவும் இல்லை என பதிலளித்தார். பிறகு தேமே என தள்ளிக்கொண்டு சத்யம் தியேட்டர் அருகே இருந்த ஆவின் பால் பூத்தில் ஒரு குளிர்ந்த பிஸ்தா பாலை அருந்தினேன். பின்னால் ஒருவர் என்னைப்போல் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வந்திருந்தார். அவரிடம் விசாரித்ததில் செய்கையில் அவரை தொடரச்சொன்னார். ஆயிரம் விளக்கு மசூதிக்கு முன் இருந்த சந்தில் திரும்பி அங்கே கடையில் யாரும் இல்லாததால் வாசலில் சைக்கிளை விட்டு பஸ்ஸில் வீட்டிற்கு கிளம்பினேன். அடுத்த நாள் பஞ்சர் போட்டு விட்டு ராயபேட்டையில் சைக்கிளை விட்டு 28 நாள் வாடகையாக ருபாய் 600ஐ(தள்ளுபடிக்கு பின்)  கடைக்காரரிடம் கொடுத்து விட்டு   திருப்தியுடன் கிளம்பினேன். 
முதல் நாள்
இரண்டாம் நாள்

பி.கு.
1.சைக்கிள் வாடகை ஐந்து வருடத்தில் ஒரு ருபாய் கூட ஏறவில்லை
2.சைக்கிள் காற்று பிடிக்க ஒரு டயருக்கு ரூ2. கொடுத்தேன். அதற்கு மட்டும் விலை ஏறியிருந்தது.

Friday, 6 January 2012

வெள்ளியங்கிரி


வெள்ளியங்கிரி மலை தமிழ்நாடு கோயம்புத்தூருக்குகிட்டத்தட்ட 40 கிமீ தொலைவில் உள்ள மலைத் தொடர். தென்கயிலை என பக்தர்களால் அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையானது கொட்டும் பனியும், கை தொட்டு விளையாடும் உயரத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு புனிதத் தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது. இது மேகங்களும் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் "வெள்ளியங்கிரி" என்ற பெயர் பெற்றது. இம் மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது. சுமார் 3500 அடி உயரமுடைய (கடல் மட்டத்திலிருந்து5000 அடி,1524 m) இம்மலை ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளது. ஐந்தரை கிலோ மீட்டர் தூரம் செல்லும் இப்பாதையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற இடங்களை கண்டு மகிழ்ந்து செல்லலாம்.இரவில், மலையில் காட்டு யானைகள் மற்றும் விலங்குகளின் நடமாட்டம் தொடங்கிவிடும் என்பதால் இங்கிருந்து மாலையிலேயே திரும்பி விடுதல் பாதுகாப்பானது..


நன்றி விக்கி தமிழ்


இது என் இரண்டாவது வெள்ளியங்கிரி பயணம், இரயில்வேதுறையில் இருக்கும் ஒருவரின் உதவியுடன் சேரன் எக்ஸ்பிரஸில்  கடைசி நேரத்திலும் டிக்கெட் கிடைத்தது, காலை ஐந்து மணிக்கு கோவை வடக்கு இரயில் நிலையத்தில் இறங்கி  காந்திபுரம் பஸ் ஸ்டாப்பிற்க்கு நடந்து சென்றேன். பூண்டி செல்ல நேரடி பேருந்து கிடைக்காததால் ஈஷா தியான மண்டபத்திற்கு செல்லும் பேருந்தில் ஏறி பூண்டி செல்ல 2கி.மி முன்பு இறங்கினேன். மேகங்கள் சூழ்ந்திருந்ததால் காலை 6.30க்கு ஊட்டி போல் இருந்தது. சில நிமிட சாலையோற நடைபயணத்திற்கு பின் பூண்டி ஆண்டவர் சன்னதிக்கு வந்தேன். அங்கே இருந்த கடையில் தேனீர் அருந்திய பின்பு விசாரித்ததில் இந்த மாதத்தில் யாரும் மலை ஏற மாட்டார்கள், தனியாக செல்ல வேண்டாம் என கூறினார் கடைகாரர், இது என் இரண்டாவது பயணம் என்று சொல்லும் போது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. கீழே இருந்த சன்னிதானத்தில் யாரும் இல்லாததால் ஒரு முறை சுற்றிவிட்டு மேலே ஏற கிளம்பினேன். நீண்ட இடைவேளைக்கு பிறகு மலையேறுவதால் சற்று சிரமமாக இருந்தது, பிள்ளையார் சன்னதி வரை தொடர்ச்சியாக ஏறிய பிறகு, அங்கிருந்த ஒருவர் என்னை அழைத்தார், அருகே சென்ற போது அவர் பெயர் புலவர்சாமி/சித்தர் என அறிமுகம் செய்துகொண்டார். சமையல் செய்திருப்பதாகவும் சற்று இளைப்பாற்றிவிட்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டார். வாழ்க்கையில் முதல் முறையாக அலுமினியத்தட்டில் சாப்பிட்டேன், பசித்து புசி என்ற பழமொழியின் அர்த்தத்தை அறிந்து கொண்டேன். பையில் இருந்த சில பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு பயணத்தை தொடர்ந்தேன்.


சென்றமுறை உச்சிவெயிலில் இருந்த மலை, இம்முறை அதற்க்கு நேர்மாறாக இருந்தது. கருமேகங்கள் சூழ இருட்டாக இருந்தது. என்னை சுற்றி யாரும் இல்லாததை இரசித்தேன், இயற்க்கையின் தாலாட்டும் குருவிகளின் சத்தம்/இசை மட்டுமே ஒலித்தன. சில மணி நேரங்களில் ஆண்டிசுனையைக்கு முன் கடைசி மலையில் மேல் பகுதி முழுவதும் மறைந்திருந்தன. சுனையில் சற்று இளைப்பாற்றிவிட்டு கையில் வைத்திருந்த பாட்டிலில் சற்று நீர் அருந்தினேன். கடைசி மலை மழையால் நன்றாக வழுக்கியது. வழுக்கு மரம் ஏறுவது போல் இருந்தது. இறுதியாக மேலே வந்தவுடன் சுயம்பு லிங்கத்தை பார்த்துவிட்டு, யாரேனும் இருக்கிறார்களா என்று பார்த்தேன். பூண்டியிலிருந்து கடைசி பேருந்து 6மணிக்கு என்பதால் சிறிது நேரத்தில் மலை இறங்க ஆரம்பித்தேன். ஒரு முப்பது அடி இறங்கிய பின்பு ஒரு குரல் என்னை அழைத்தது, மேலே பார்த்த பொழுது சித்தர் போல தோற்றமலித்த ஒருவர் தேனீர் அருந்தலாம் என்று கூறினார், இரவு இரயிலில் பிடிக்க இருப்பதால் இன்னொரு முறை என்று சொல்லிவிட்டு இறங்கினேன். அடைமழையில் நனைந்துக்கொண்டே இறங்கினேன். அவ்வப்பொழுதி காலில் ஏறிய அட்டைப்பூச்சிகளை அகற்றிக்கொண்டே மிக வேகமாக பிள்ளையார் கோவில் சென்றேன். அங்கிருந்த புலவர் சித்தரிடம் விடைப்பெற்றுக்கொண்டு பைகளை நிறப்பிக்கொண்டு இறங்கினேன். நவம்பர் மாதம் என்பதால் கீழே எந்த கடையும் திறக்கவில்லை, சென்ற முறை வந்த பொழுது குடிக்க மாம்பிழச்சாறு கிடைத்தது. டீ கடை மட்டும் இப்போது திறந்திருந்தது. இரண்டு டீ குடித்துவிட்டு  நன்றாக நனைந்திருந்ததால் வேறு உடை மாற்றிக்கொண்டு பேருந்துக்காக காத்திருந்தேன். அங்கே இருந்த வனக்காவலர்களிடம் பேச்சு கொடுத்ததில் இவ்விடம் காட்டுயானைகள் நடமாடும் பகுதி என்பதை அறிந்து கொண்டேன். குரங்குகள் கூட்டம் செய்யும் செஷ்டைகளை வேடிக்கை பார்த்துகொண்டிருக்கும் போதே பேருந்தும் வந்தது, கோவைக்கு ஒரு டிக்கேட் எடுத்துக்கொண்டு இரவு கோவை இரயில் நிலையத்தில் சேரன் எக்ஸ்பிரஸ் ஏறி காலை சென்னை வந்து சேர்ந்தேன்.பி.கு.
இப்பயணம் நவம்பர் 2010 ல் சென்றது. டைரி குறிப்புகளை பார்த்து இப்போழுது எழுதுகிறேன்.

மலை ஏறி இறங்கும்வரை நான் மொத்தம் பார்த்த மக்களின் எண்ணிக்கை ஐந்து.

Wednesday, 4 January 2012

இமாலய டிரெக்கிங் 2011 - 12

“பாதை இல்லாத காடுகளில் ஒரு சந்தோஷம் உள்ளது, யாரும் இல்லா கரையில் பேரானந்தம் கிடைக்கிறது. நம்மை தவிற மனிதர்கள் யாரும் இல்லாத சமுகம் ஒன்று இருக்கிறது, கடலுக்கு அடியில், மலை உச்சியில், இயற்கை எனும் சாம்ராஜ்ஜியத்தில் மரங்கள், விலங்குகள் ஆட்சி புரியும் அந்த இடம். நான் மக்களை வெறுக்கவில்லை, ஆனால் இயற்கையை பெரிதும் நேசிக்கிறேன்.”  - பைரன்.

நீண்ட நாட்களாக இமயமலையின் இயற்கை காட்சியை இரசிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கணவு,  இதற்க்கு முன் இரண்டு முறை சென்றிருந்தாலும், அது ஒரு குடும்ப சுற்றுலா போல் அமைந்தமையால் அவ்வளவாக பிடிக்கவில்லை. அவசர அவசரமாக எல்லா கோவில்கள், பூங்காக்களை சுற்றி வருவதில் சிறிதும் உடன்பாடு இல்லாதமையால் தனியாக செல்ல முடிவெடுத்தேன்.

Yha என்ற ஒரு அமைப்பு, ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள டல்ஹௌசி என்னும் இடத்திலிருந்து ஆறு நாட்கள் காட்டுவழிப்பாதையில் ட்ரெக்கிங் செய்வதற்க்கான திட்டத்தை அறிவித்திருந்தது. கடைசி நேரத்தில் தகவல் தொடற்புத்துறை வளர்ச்சியின் பயனால் பதிவு செய்து அந்த அமைப்பின் தற்காலிக அடையாள அட்டையும், ட்ரெக்கிங்    செல்வதற்கான  அனுமதி அட்டையையும் மின்னஞ்சலில் பெற்றேன்.


இன்னும் மூன்று தினங்களில் ஜம்மு அருகே உள்ள பானிகேட் என்ற இடத்தில் ட்ரெக்கிங் ஆரம்பமாகும் என மின்னஞ்சல் வந்தது. வேறு வழி இல்லையென்றால் மட்டுமே விமான பயணம் மேற்கொள்ளும் பழக்கம் என்னிடம் உண்டு. அதனால் அடுத்த நாள் சென்னையில் இருந்து டில்லி செல்லும் துரந்தோ இரயிலில் irctcயில் டிக்கெட் எடுத்தேன். டில்லியில் இருந்து ஜம்மு செல்ல அனைத்து டிக்கெட்டும் வைட்டிங் லிஸ்டில் இருந்ததால் நண்பனிடம் சொல்லி அடுத்த நாள் தட்கலில் எடுக்க சொன்னேன்.திங்கள் காலை துரந்தோ எக்ஸ்பிரஸில் பயணம் இனிதே துவங்கியது. இரயில் பயணத்தை பற்றி எழுத ஆரம்பித்தால் அதற்கே தனி பதிவு போட வேண்டியிருக்கும்.இரயில் பயணம்
நாள் 1,2 துரந்தோ எக்ஸ்பிரஸ் சென்னை – டில்லி
நாள் 2,3  உத்தர் எஸ் கிராந்தி எக்ஸ்பிரஸ் டில்லி – பதங்கோட் , பஞ்சாப்.

பஸ் பயணம்.
நாள் 3. பத்ங்கோட் – பானிகேட், ஹிமாச்சல பிரதேசம்.

தமிழனென்பதால் பத்து ருபாய் ஷேர் ஆட்டோ பயணத்திற்கு என்பது ருபாய் அழுதேன். அவன் முதலில் கேட்டது 200 ருபாய். எனக்கு தெரிந்த எக் காவ் மே எக் கிஸான் ரஹதாத்தா!  ஹிந்தியில் பேரம் பேசி 80 ருபாய்க்கு வர சம்மதித்தான்.

துங்கும் பைபானிகேட்டில் முதல் முகாமை வந்தடைந்தேன், இரண்டுநாள் தொடர் பயணத்தால் மிகவும் கலைப்பாக இருந்தது. என்னுடைய அடையாள அட்டையும் மருத்துவ சான்றிதழையும் சரி பார்த்துவிட்டு எனக்காக ஒதுக்கப்பட்ட அறையில் சென்று ஓய்வெடுத்தேன். சிறிது நேரத்திற்கு பிறகு கண்விழித்த பொழுதுதான் தெரிந்தது  அந்த 10*10 அறையில் பதினோறு பேர் உறங்க வேண்டும் என்பது. ஸ்லீப்பிங் பேக் ஒவ்வொருவருக்கும் தனியாக கொடுத்திருந்தமையால், இரவில் அனைவரும் எகிப்து மம்மி போல் அந்த பையில் எதிர் எதிரே படுத்துக்கொண்டோம். காலை ஆறு மணிக்கு டீ கொடுத்தனர்.

நாள் 4. பானிகேட்-டல்ஹௌஸி  நடைபயணம்.
புதிதாய் காடுகளில் நடப்பவர்களின் நலனுக்காக முதல் நாள் ஐந்து கி.மி. தூரம் மட்டுமே பயணம் செய்யப்போவதாக அறிவித்தனர். பானிகேட்டிலிருந்து டல்ஹௌஸி வரை பாதி தூரம் காடுகளிலும், மீதி தூரம் வாகனங்கள் செல்லும் பாதையிலும் இருந்தது. ஏற்கனவே எனக்கு நிறைய அனுபவம் இருந்ததால் இரண்டு மணி நேரத்தில் முதல் ஆளாக டல்ஹௌஸி வந்து சேர்ந்தேன். 

இந்த டிரெக்கிங்கில் அதிநவீன வசதிகள் படைத்த விடுதி இதுதான், அதாவது கட்டில், போர்வை, தலையனை, சுடான நீர் ஆகியவை அடங்கும். கூட வந்த டாக்டர்களுடன்  கிரிக்கெட் விளையாடினேன்.அருகே இருந்த மைதானத்தில்  குழுப்புகைப்படம் எடுத்துக்கொண்டோம். பெண்கள் பல பேர் வந்திருந்தது ஆச்சிரியமாக இருந்தது.  இரவு கேம்ப்இல் அனைவரும் ஹிந்தி பாடல்களை பாடிக்கொண்டிருந்தனர். என் முறை வர   கொலவெறி பாடலை நான் பாட அனைவரும் கூட சேர்ந்து பாடினர்.  ஐம்பது பேரில் இருவர் மட்டுமே தமிழர்களாக இருந்தும் அனைவருக்கும் அந்த பாடல் தெரிந்திருந்தது. துங்கும் முன் அனைவருக்கும் பருக பூஸ்ட் கொடுத்தனர்.நீண்ட நாட்களுக்கு பிறகு இரவு 9 மணிக்கு தூங்கினேன்

நாள் 5. டல்ஹௌஸி-காலாடாப் டிரெக்.
முதல் நாள் சுலபமாக கடந்தவர்களுக்கு சற்று கஷ்டமாக இருக்க . உண்மையாக டிரெக்கிங் அனுபவம் இங்குதான் துவங்கியது. காடுகளுக்கு நடுவே குளிரில் ஆரம்பித்த பயணம், வழி நெடுக  பைன் மரங்கலாலும், பறவைகளாளும் நிறைந்திருந்தன.  முதலில் செல்வதன் பயனால்   அறிய காட்டு கோழியையும், ஹிமாச்சல பிரதேசத்தின் பிரத்யேக பறவையையும், கரடியையும் இயற்கையில் பார்க்கும் அனுபவம் கிடைத்தது. காலையிலேயே மதிய உணவாக இரண்டு ரொட்டியும் உருளைக்கிழங்கும் yhai அமைப்பினர் கொடுத்திருந்தார்கள் வழக்கம்போல் முன்பே வந்ததால் எனக்கு மட்டும் இரண்டுமணி நேர ஓய்வு கிடைத்தது. காலாடாப் அந்த பகுதியிலேயே உயரமான சிகரமாகும் ஊட்டிக்கு தொட்டபேட்டா போல். 

 உயரத்திற்கு தகுந்தார்போல் குளிரும் இருந்தது. சுற்றி உள்ள பனிமலைகளே அதற்கு சாட்சியாக இருந்தது. ஏழு மணிக்கு மேல் கடும் குளிர் நிலவும் என்பதால் ஆறு மணிக்கெல்லாம் இரவு சாப்பாடை முடித்துக்கொண்டு அவரவர் டெண்டுகளுக்கு சென்று உறங்கும் பையில் அடைக்கலமானோம். அடுத்த நாள் காலை கடண்களை முடித்த பொழுது frozen ass என்பதன் அர்த்தத்தை அறிந்துகொண்டேன்.

நாள் 6. காலாடாப்-கஜ்ஜையார் டிரெக்


இதுவும் 90 சதவிகிதம் காட்டு வழிப்பயணம்.  அடர்ந்த காடுகளுக்கிடையே சூரியவெயில் உட்புகாத வழியில் பயணம் ஆரம்பித்தது. கடந்த ஐந்து வருடங்களாக பயன்படுத்திய பூட்ஸ் தன் கடைசி காலத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. இரண்டு தையல் விட ஆரம்பிக்க பல இடங்களில் சறுக்க ஆரம்பித்தேன், என் வேகத்தை குறைத்து அனைவருக்கும் வழிவிட்ட பின் தனியாக பிந்தொடர்ந்தேன். பின்பு தான் அது ஒரு பெரிய தவறாக தோன்றியது.  வழுக்கும் பூட்ஸுடன் பின் தொடர்வதால் கஷ்டமாக இருந்தது. மதியம் காடுகளுக்கு நடுவே ஒரு நீர் ஓடையின் அருகே மதிய உணவிற்காக நின்றோம்.


சிறிது நேரம் தூங்கியதன் காரணத்தால்  குளிர் அதிகமாக தெரிந்தது. அங்கே இருந்த சில காட்டுவாழ் மக்கள் தீயை மூட்டி அருகில் அமர்ந்திருந்தனர். அவர்களுடன் சேர்ந்து அமர்ந்து கொண்டேன். மதியம் 4 மணிக்கு கஜ்ஜியார் பகுதிக்கு வந்து சேர்ந்தோம். பார்க்க மிகவும் ரம்மியமாக தோற்றமலித்தது. ஒரு சிறு ஏரியை சுற்றி புல்வேலி அகலமாக இருந்தது. சிலர் பாரா கிலைடிங்கிலும் ஈடுபட்டனர்.  நாங்கள் தங்கும் இடம் ஏரியை அடுத்து இருந்தது. இருந்த இடத்திற்கு பின்னால் ஒரு பெரிய சிவன் சிலை வடிவமைத்திருந்தனர்.


 முழுக்க வெண்கலத்தினால் அமைந்த சிலையை பார்க்கும் பொழுது தானாகவே கைகள் கும்பிட்டதாக கூட வந்தவர்கள் கூறினார்கள், எனக்கு அதன் சிற்பியை பாராட்ட வேண்டும் என்றே தோன்றியது. இங்கு ஆறு பேருக்கு ஒரு அறை என்று பிரித்தது ஏதோ மாளிகையில் இருப்பது போல் இருந்தது.


நாள் 7 கஜ்ஜையார்-மங்கலா டிரெக்.


கடந்த 4 நாட்களாக ஏறிய மலையை வேறுபாதையில் இறங்க ஆரம்பித்தோம், இறங்கும் போது பலருக்கு முட்டி வலி ஏற்பட்டது, சுமார் 8 கி.மி. இறங்கிய போது அனைவருக்கும் உடலில் உள்ள அனைத்து இனைப்புகளிலும் வலி இருந்தது. இனிதாக டிரெக்கிங் நிறைவுக்கு வந்தது. நாங்கள் தங்கிய இடத்திலிருந்து சம்பா, ஹிமாச்சல பிரதேசத்தில் பழமையான நகரத்திற்கு காரில் சென்றோம். ஆறு நாட்களுக்கு பிறகு ரொட்டி உருளைகிழங்கை தவிற வேறு உணவு ஒரு பதம் பார்த்தோம். ஸ்வீடுடன் இனிதே நிறைவேறியது நடை பயணம்.
நாள் 8. மங்கலா-பானிகேட் பஸ் பயணம்.

நாள் 9 பானிகேட் - பதன்கோட் கார் பயணம், பதன்கோட்-டில்லி ரயில் எக்ஸ்பிரஸ் 
நாள் 9,10,11  டில்லி - சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்  பி.கு. 1 
முதல் நாள் குளித்ததோடு சரி, மீண்டும் சென்னை வந்துதான் குளித்தேன். ஒரே செட் டிரஸ்தான் தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸில் ஏறும்வரை போட்டிருந்தேன், பாதி வழியில் எடுத்து வந்தோம் என்ற ஒரே காரணத்திற்காக டி ஷர்ட்  போட்டுக்கொண்டு ஒரு போட்டோ கிளிக்கினேன்.


சுமாராக இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் மொபைலில் எடுத்தது. மேலும் விவரங்களுக்கு.. :)


Special thanks to Srivatsan, Karthikeyan, Damodaran, Murali.
Photo's courtesy Ravindra Chavan