Saturday 7 January 2012

மீண்டும் ஒரு ஹவர் சைக்கிளின் கதை


முதல் மூன்று பத்திகள் முன்பே எழுதியது, ஏற்கனவே படித்த அந்த பத்து பேர்(கொஞ்சம் அதிகமா சொல்றேனோ.:)) நேராக நாங்காம் பத்திக்கு சென்றுவிடவும்.  
சைக்கிள் ஒட்ட தெரியாது என்றால் முகப்புத்தகத்தில் அக்கவுன்ட் இல்லை என்பது போல, என் வீடு மௌன்ட் ரொடில்(அண்ணாசாலை) இருந்ததால் அப்பா சைக்கிள் ஓட்ட சொல்லிக்கொடுப்பதில்லை, வருடமொருமுறை அத்தை வீட்டிற்கு கொளத்தூர் செல்லும் பொழுது ஹவர் சைக்கிள் எடுத்து மாமாவின் உதவியுடன் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.

அப்பொழுது நான் 5ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன், என் அத்தைக்கு இரண்டு பெண்கள், அரையாண்டு விடுமுறைக்கு அத்தை வீட்டிற்க்கு சென்றபோது, அங்கே மூத்தவள் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தாள்,  வெட்கமாய் இருந்தது, அன்றே மாமாவிடம் சொல்லி சைக்கிள் வாடகைக்கு எடுத்து ஓட்ட ஆரம்பித்தேன், ஓட்டுவதென்றால் காலை இருபுறமும் கீழே வைத்து தள்ளிக்கொண்டிருந்தேன்,கொளத்தூர் சாலைகலை பற்றி சொல்லத்தேவையில்லை,  கீழே இருந்த பாறையில் பட்டு கட்டைவிரல் நகம் பெயர்த்துக்கொண்டது, காலில் இருந்த இரத்தததை பார்த்து பயந்து விட்டனர், ஒரு வார இராஜவாழ்க்கையென்றாலும் சைக்கிள் ஓட்டுவது எட்டாக்கனியானது.

அண்ணாசலையிலிருந்த வீட்டை விற்றுவிட்டு, இராஜ்பவன் அருகே குடிபெயர்ந்தோம், பக்கத்தில் திடல் இருந்ததால் வார இறுதியில் சித்தப்பாவை அழைத்துக்கொண்டு ஒருவழியாக சைக்கிள் கற்றுக்கொண்டேன். பிறகு என் பொழுதுபோக்கு சைக்கிள் ஓட்டுவது மட்டுமே, பள்ளியில் இருந்து வந்தவுடனே, ஐந்து ருபாய் எடுத்துக்கொண்டு ஹவர் சைக்கிள் கடைக்கு ஓடுவேன், தாமதமாக சென்றால் ஓட்டை சைக்கிள்தான் கிடைக்கும், கொக்கு சைக்கிள் ஒரு மணி நேரத்திற்க்கு மூன்று ருபாயும், சாதா சைக்கிள் இரண்டரை ருபாய்க்கும் கிடைக்கும். ஐம்பது பைசாவின் அருமை அறிந்த காலம். பின்பு அப்பாவிடம் கெஞ்சி பரிட்சையில் நல்ல மதிப்பெண் வாங்கி என் முதல் சைக்கிள் வாங்கினேன். mtb hercules என் முதல் சைக்கிள், நான் கடைசியாக பயன்படுத்திய சைக்கிள், .BSA-slr சும்மா பறக்கும்.



சுமார் ஐந்து வருடங்களுக்கு பின் சைக்கிள் ஓட்டும் ஆசை துளிர் விட்டது.  புது சைக்கிள் வாங்கலாம் என்றால், ஒரு நாள் கூத்திற்க்கு ஏண்டா இவ்வளவு செலவு செய்கிறாய் என்றாள் அம்மா. எதையும் கேட்காமல் நேராக சைதாப்பேட்டையில் இருக்கும் பாலாஜி சைக்கிள் கடைக்கு சென்றேன். இரண்டாயிரம் கொடுத்து வாங்கிய சைக்கிள் இப்பொழுது மூவாயிரத்தி ஐநூறு ருபாயாகியிருந்தது. இது எனக்கே சற்று அதிகமாக இருந்ததால் பழைய சைக்கிள் ஏதாவது இருக்கிறதா என்று கேட்ட பொழுது ஐந்தாயிரம் ருபாய்க்கு ஒரு சைக்கிள் இருப்பதாக காட்டினார். பார்க்க இஞ்சின் இல்லா டிவிஎஸ் போல இருந்தது. கடையை விட்டு நடையை கட்டினேன்.

சரி சிறுவயது ஹவர் சைக்கிள் கடை ஞாபகம் வர அங்கே சென்று பார்த்த பொழுது அதற்கான சுவடே இல்லை, கடையை பற்றி விசாரிக்கும் பொழுது “ஊருக்கு புதுசா?” என்ற தோரனையில்  அனைவரும் என்னை பார்த்தனர்.

முகப்புத்தகத்திலு, டிவிட்டரிலும் என் ஆசையை பகிர கல்லூரி நண்பனின் உதவியுடன் ராயபேட்டை நியு காலேஜை அடுத்து ஒரு ஹவர் சைக்கிள் கடையில் ஒரு சைக்கிளை வாடகைக்கு எடுத்தேன். தாத்தா சைக்கிள் என்று அழைக்கப்படும் பெரிய சைக்கிளே கிடைத்தது. நண்பனின் நண்பனுடைய வீட்டிற்கு கீழ் கடை இருந்ததால் முன்பணம் எதுவும் கொடுக்கவில்லை, ஒரு நாளுக்கு ருபாய் 25 என பேசப்பட்டது. குறைந்தது இரண்டுவாரமாவது வைத்திருப்பேன் என்ற உறுதிமொழியுடன் முதல் பயணமாக ராயபேட்டையிலிருந்து கிண்டிவரை சைக்கிளை மிதித்தேன். சைக்கிள் ஓட்டும் ஞாபகம் இல்லாமல் ஜெமினி மேம்பாலத்தில் ஏற சற்று சிரமத்துடன் நீண்ட நேரம் காத்திருந்து நுங்கம்பாக்கம் செல்லும் வண்டிகளிலிருந்து பிரிந்து பாலத்தை கடந்தேன்.


பல நாட்களுக்கு பிறகு சென்னையில் சட்டை முழுவது வியர்வையால் நனைந்தது. சைக்கிள் ஓட்டும் பொழுதுதான் சென்னையில் இன்னும் பலரது வாழ்வில் சைக்கிளே இன்னும் ஓடிக்கொண்டிருந்தது. சைக்கிள் ஓட்டும் எவரிடமும் தொப்பை இல்லை, அனைவரும் உடைகளை பார்க்க கீழ் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் போல் இருந்தாலும் அவர்கள் உடல் வலமாக இருந்தது. தன் மனைவியை பின்னாலும், குழந்தையை முன்னாலும் உட்காரவைத்து வியர்வை விருவிருக்க சென்றவரை பார்க்கும்பொழுது சற்று பொறாமையாகவே இருந்தது. ஹோண்டா சிட்டியில் ஒப்பனையுடன் இருக்கும் தன் மனைவியை அழைத்துசெல்லும் டை அடித்தவர்களை பார்க்கும் பொழுது ஏற்படாத உணர்வு.

சைக்கிளும் அம்மிக்கல்லும் மறைய மறைய இயற்கையாகவே ஆண்களிடத்திலும் பெண்களிடத்திலும் சோம்பேறித்தனமும் தேவையில்லாத கொழுப்பும் சேரத் துவங்கிவிடும். பிறகு மாதம் ஆயிரக்கணக்கில் ஸ்டாண்ட் போட்ட சைக்கிளை ஓட்ட செலவு செய்கிறோம்.


சைக்கிள் வாடகைக்கு எடுத்து  முதல் மூன்று நாள் ஓட்டியதோடு சரி, அப்படியே இரண்டு வாரம் வீட்டில் சும்மாவே இருந்தது. சரி எப்படியும் 500 ருபாய் செலவுசெய்யப்போகிறோம் கடைசி நாளாவது ஓட்டலாம் என்ற எண்ணத்துடன் மிதிக்கத்துவங்கினேன். ஐ-பாட்  உதவியுடன் முதல் நாள் 16கி.மி சென்னையை பாதி சுற்றினேன். சைக்கிள் ஓட்டும் போதையில் அடுத்த நாள் சுமார் 22 கி.மி தாண்டி ஓட்டிக்கொண்டிருந்த பொழுது சென்னை எல்.ஐ.சி அருகே பஞ்சர் ஆனது. இரவு 8.30 என்பதாலும் அண்ணாசாலை என்பதாலும் ஒரு கடையும் திறக்கவில்லை, அப்பறம் வழியில் இருந்த கடைக்காரரிடம் கேட்ட பொழுது இங்கு எதுவும் இல்லை என பதிலளித்தார். பிறகு தேமே என தள்ளிக்கொண்டு சத்யம் தியேட்டர் அருகே இருந்த ஆவின் பால் பூத்தில் ஒரு குளிர்ந்த பிஸ்தா பாலை அருந்தினேன். பின்னால் ஒருவர் என்னைப்போல் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வந்திருந்தார். அவரிடம் விசாரித்ததில் செய்கையில் அவரை தொடரச்சொன்னார். ஆயிரம் விளக்கு மசூதிக்கு முன் இருந்த சந்தில் திரும்பி அங்கே கடையில் யாரும் இல்லாததால் வாசலில் சைக்கிளை விட்டு பஸ்ஸில் வீட்டிற்கு கிளம்பினேன். அடுத்த நாள் பஞ்சர் போட்டு விட்டு ராயபேட்டையில் சைக்கிளை விட்டு 28 நாள் வாடகையாக ருபாய் 600ஐ(தள்ளுபடிக்கு பின்)  கடைக்காரரிடம் கொடுத்து விட்டு   திருப்தியுடன் கிளம்பினேன். 




முதல் நாள்
இரண்டாம் நாள்









பி.கு.
1.சைக்கிள் வாடகை ஐந்து வருடத்தில் ஒரு ருபாய் கூட ஏறவில்லை
2.சைக்கிள் காற்று பிடிக்க ஒரு டயருக்கு ரூ2. கொடுத்தேன். அதற்கு மட்டும் விலை ஏறியிருந்தது.

No comments:

Post a Comment