Sunday, 8 January 2012

தலகோனா-திருப்பதி


“பாதை இல்லாத காடுகளில் ஒரு சந்தோஷம் உள்ளது, யாரும் இல்லா கரையில் பேரானந்தம் கிடைக்கிறது. என்னை தவிற மனிதர்கள் யாரும் இல்லாத சமுகம் ஒன்று இருக்கிறது, கடலுக்கு அடியில், மலை உச்சியில், இயற்கை எனும் சாம்ராஜ்ஜியத்தில் மரங்கள், விலங்குகள் ஆட்சி புரியும் அந்த இடம். நான் மக்களை வெறுக்கவில்லை, ஆனால் இயற்கையை பெரிதும் நேசிக்கிறேன்.”  - பைரன்.

தலகோனா,  தல –கோனா மலைகளின் தலைவன், திருப்பதி ஏழுமலைகளில் முதல் மலை, திருப்பதியில் இருந்து சுமார் ஐம்பது கி.மி தொலைவில் உள்ளது. சந்தன மரங்கள் மற்றும் அறிய காட்டு விலங்குகள் இருக்கும் இடம். தலகோனா நீர்வீழ்ச்சி விழும் நீர் எண்ணற்ற மூலிகைகளின் கலவையாகும், காட்டு வழிப்பாதைகள் நிறைந்த இந்த இடம் ட்ரெக்கிங் செல்பவர்களுக்கு ஏற்றது.


“டேய் நீ மட்டும் தனியா ட்ரெக்கிங் போயிட்டு வந்துட்டு ஃபேஸ்புக்ல போட்டு கடுப்பாக்குற, மரியாதையா எங்களையும் ஒரு தடவ கூட்டிட்டுபோ.”

“அடுத்த வாரம் இமாலய பயணம் செல்லப்போவதை பற்றி அப்போது யாரிடமும் சொல்லவில்லை, திருப்பதி பக்கத்தில் தலகோனா நீர்வீழ்ச்சியை பார்க்கலாம் என்று முடிவு செய்து ஞாயிறு காலை 7.30க்கு காரில் கிளம்பினோம். இது முதல் பயணம் என்பதால் கூகுள் மேப்ஸில் வழியை பார்த்து பிரிண்ட் எடுத்துக்கொண்டேன், இந்தியாவில் கூகுள் மேப்பை உபயோகிப்பது, அந்திரா மீல்ஸில் பிட்சா கேட்பது போல் இருந்தது. சிறிது தூரத்தில் பிரிண்ட் அவுட்டை தூக்கி வீசினேன். சரி ரேணிகுண்டா வரை சென்று அங்கிருந்து வழி கேட்டு செல்ல முடிவெடுத்தோம். வந்த நால்வரில் மூன்று பேருக்கு தெலுங்கு தெரிந்திருந்ததால் வழி கேட்பதில் எந்த பிரச்சனைனும் இல்லை, பத்துக்கும் மேற்பட்டவர்களின் உதவியுடன், தலகோனா செக்போஸ்ட் வந்து சேர்ந்தோம். காரில் எத்தனை வாட்டர் பாட்டில் இருக்கிறது என்று கேட்டு பாட்டிலுக்கு பத்து ருபாய் வாங்கிக்கொண்டனர், திரும்பி வரும்போது காலி பாட்டிலைக் காட்டி காசைத் திரும்பப்பெற்றுக்கொள்ளுமாறு கூறினர்,  பிளாஸ்டிக் குப்பைகளை கையாள இந்த யுக்தி எனக்கு பிடித்திருந்தது. எல்லா இடத்திலும் இதை நடைமுறைப்படுத்தினால் நன்றாக இருக்கும்.அங்கு விற்ற சப்போட்டா பழத்தையும், வறுத்த வேர்கடலையும் வாங்கிக்கொண்டோம்.

செக்போஸ்டிற்கு பிறகு சாலை சுமாராகத்தான் இருந்தது. இருபது நிமிடத்தில் தலகோனா பார்க்கிங் ஏரியாவில் வண்டியை நிறுத்தி அனைத்து சாதனங்களையும் வண்டியிலேயே விட்டு கிளம்பினோம். குரங்குகள் தொல்லையை தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை, ஞாயிறு என்பதாலும், மது வகைகளை உள்ளே எடுத்து செல்ல அனுமதி இல்லாததால் குடும்பத்துடன் நிறைய பேர் வந்திருந்தனர். குப்பைகளை அரிதாகவே காணமுடிந்தது.

அருவியிலிருந்து வரும் நீரை ஒரு குட்டை போல் தேக்கி வைத்திருந்தனர். மலை ஏற முடியாதவர்கள் இங்கேயே குளித்து விட்டு செல்லலாம். டிரெக்கிங் போல் இல்லாமல் அனைவரும் சிரமமின்றி ஏற சிமென்ட் கற்களாலும் கைப்பிடிகளாலும் வழி அமைத்திருந்தனர். அரைமணி நேர நடை பயணத்திற்க்கு பின்பு அருவி கொட்டும் ஓசை கேட்டது. நிறைய பேர் அங்கிருந்தனர், ஒரு மினி ஜாக் ஃபால்ஸ் போல இருந்தது. சுமார் 80 மீட்டர் உயரத்திலிருந்து தண்ணீர் அருவியாக வீழ்ந்துக்கொண்டிருந்தது. கீழே கூட்டம் அதிகம் இருந்ததால் இன்னும் சற்று மேலே சென்றோம், இப்போது பாதை  சற்று கடினமாக இருந்தது,  இங்கு எங்களை தவிர யாரும் இல்லை, இங்கு பாசிப்படிந்து மிகவும் வழுக்கலாக இருந்தது. வனத்துறை சார்பில் தடுப்புக்கம்பிகள் இருந்ததால் தைரியமாக அருவின் கீழ் சென்றோம், முதலில் யாரோ மேலே இருந்து ஐஸ் கட்டிகளை எறிவது போல் இருந்தது, திடீர் என தண்ணீரின் வேகம் அதிகரிக்க என் நண்பனொருவன் அங்கேயே வழுக்கி விழுந்தான், நல்லவேளை  பெரிதாக ஒன்றும் அடிபடவில்லை. அரைமணிநேர குளியலுக்கு பிறகு அங்கிருந்து கிளம்பினோம். மதியம் ஒன்றும் சாப்பிடாததால் எல்லோருக்கும் பசியாக இருந்தது. செக்போஸ்டில் காலி பாட்டில்களை காட்டி திரும்ப காசைப்பெற்றுக்கொண்டோம். சப்போட்டா இனிப்பாக இருந்ததால் மேலும் சிலவற்றை வாங்கினோம்.

பசி அதிகரிக்கவே கீழ் திருப்பதியில் உள்ள பீமாஸில் உணவருந்திவிட்டு சென்னைக்கு கிளம்பினோம். சென்னையில் இருந்து ஒரு நாள் பயணமாக காரில் குடும்பத்துடன் செல்ல ஏற்ற இடம். வழக்கமாக இதுபோன்ற நீர்வீழ்ச்சிகளில் பார்க்கும் போதை ஆசாமிகள் யாரும் இல்லை, படகு சவாரி, காட்டில் ஜீப் சவாரி, ஒரு நாள் தங்கி வர ஆசைபடுபவர்களுக்கு ஆந்திர பிரதேச சுற்றுலா கழகம் சார்பாக கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகை என அனைத்து தரப்பினர்க்கும் ஏற்றவாறு அமைந்துள்ளது இந்த தலகோனா நீர்வீழ்ச்சி. அங்கும் ஒரு பழமையான சிவன் கோவில் ஒன்று உள்ளது, காலை வீட்டை விட்டு கிளம்பும் போது “எங்கே போகிறாய்?” என அம்மா கேட்ட போது, "கோவிலுக்கு போகிறேன்" என்று சொன்னது நினைவிற்க்கு வந்தது.

பி.கு.
1. காரிலேயே போனை வைத்து விட்டதால் ஒரு புகைப்படத்தையும் நான் எடுக்கவில்லை.
2. மேலே உள்ள படம் நெட்டில் எடுத்தது.

No comments:

Post a Comment