Thursday, 18 April 2013

"கசோல்" இமயமலையில் ஒரு ஐரோப்பிய நகரம்

“பாதை இல்லாத காடுகளில் ஒரு சந்தோஷம் உள்ளது, யாரும் இல்லா கரையில் பேரானந்தம் கிடைக்கிறது. நம்மை தவிற மனிதர்கள் யாரும் இல்லாத சமுகம் ஒன்று இருக்கிறது, கடலுக்கு அடியில், மலை உச்சியில், இயற்கை எனும் சாம்ராஜ்ஜியத்தில் மரங்கள், விலங்குகள் ஆட்சி புரியும் அந்த இடம். நான் மக்களை வெறுக்கவில்லை, ஆனால் இயற்கையை பெரிதும் நேசிக்கிறேன்.”  - பைரன்.கணினியில் நீண்ட தேடலுக்கு பின் இமாச்சல தேசத்தில் உள்ள கசோல் என்ற இடத்திற்கு செல்ல முடிவு செய்தேன், தனியாகவே செல்லும் விருப்பம் உள்ள போதும் நீண்ட நாட்களாக என்னை நச்சரித்துகொண்டிருந்த இரண்டு நண்பர்களையும் அழைத்து செல்லலாம் என்று அவர்களுக்கு இவ்விடத்தை பற்றி கூறியவுடன் சரி என்றனர், அடுத்த நாள் காலை தட்கலில் டில்லிக்கு செல்லும் தொடர்வண்டிக்கு   முன்பதிவு செய்தோம்.

அடுத்த நாள் காலை இரயில் நிலையத்தில் சந்தித்து பெட்டிக்கு வெளியே ஒட்டப்பட்ட சார்ட்டில் எங்கள் பெயர் உள்ளதா என்று சரி பார்த்தோம், எப்போதும் போல நான் பக்கத்தில்  யார் உட்காருகிறார்கள் என்று பார்த்த போது என்னை விட ஒரு வயது பெரிய பெண் பெயர் இருந்தது, மனதிர்க்குள்  விண்னைதாண்டி வருவாயா படம் ஓட ஆரம்பித்து அவளை பார்த்தவுடன்  தடைப்பட்டது, மூன்று குழந்தைகளுடன் தன் கணவன் அருகில் இருந்தாள். பெட்டி காலியாக சென்றதால் அவர்கள் குடும்பம் பக்கத்து பர்த் நோக்கி சென்றது.
ராஜ்தானி என்பதால் தனியாக காசு கொடுத்து உணவு வாங்கவேண்டியதில்லை, வெஜ் அ நான் வெஜ் என முன்பே கேட்டுக்கொண்டனர், நான் வெஜ் ஆசையாக சொன்ன கார்த்தி மற்றும் முரளிக்கு அவர்கள் தட்டில் வந்த ஒரு முட்டை ஏமாற்றியது. அடுத்த நாள் காலை வழக்கத்தை விட சரியான நேரத்திற்க்கு டெல்லி வந்து சேர்ந்தோம் , மாலை ஆறு மணிக்கு மணாலி செல்லும் பேருந்தில் முன்பதிவு செய்திருந்ததால் மாலை வரை தங்குவதற்க்கு ரூம் வாடகைக்கு செலவு செய்வதற்க்கு பதில் irctc உணவகத்திற்க்கு சென்று சிறிய இடைவெளியில் ஏதாவது ஒன்று சாப்பிட்டுக்கொண்டே இருக்க சுமார் ஆறு மணி நேரம் அந்த உணவகத்தில் இருந்த கிட்ட திட்ட அனைத்து பொருளையும் ருசி பார்த்த பின் பஸ் நிலையத்தை நோக்கி சென்றோம், எங்களை தவிர அனைவரும் தேனிலவிற்க்காக வந்திருந்தனர், பஸ் பின் இருக்கைகள் காலியாக இருந்ததால் அவர்கள் நடுவே இருப்பதற்க்கு பதில் பின்னோக்கி சென்றோம். வழியில் ஒரு தாபாவில் இரவு உணவிற்க்காக பஸ் நிறுத்தப்பட்டது. நட்ட நடு இரவில் பகல் கொள்ளை நடைப்பெற்றது, ஒரு பன்னீர் மற்றும் ஐந்து ரொட்டிக்கு ஐனூறு ருபாய் கொடுத்து விட்டு வந்தோம். சென்ட்ரலில் ஒரு சீக்கியரிடம் எக்மோர் செல்ல முன்னூறு ருபாய் கேட்டுக்கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர் நினைவிர்க்கு வந்தார். கயோஸ் தியரியின் செய்முறை விளக்கம் புரிந்தது.


கசோல் செல்ல மணாலிக்கு முப்பது கி.மீ  முன்னரே இறங்க வேண்டியதால் நாங்கள் மூவரும் ஓட்டுனர் அருகே சென்றோம், முடிந்த அளவு புதுமண ஜோடிகளை பார்க்காமல் சென்றும், சிலர் கண்களில் சிக்கினர், நல்லவேளை அவர்கள் மத்தியில் உட்காரவில்லை :).


இறங்கியவுடன் ஒரு கார் ஓட்டுனர் அருகில் வந்து  கசோலுக்கு செல்ல ருபாய் எண்ணூறு ஆகும் என்று சொன்னார், ஏற்கனவே ஐனூறு ருபாய் இழந்த அதிருப்த்தியில் வேண்டாம் என்று சொல்லி விட்டு அருகில் இருந்த தேனீர் கடைக்கு சென்று கசோலுக்கு செல்லும் பேருந்து நிலையத்திற்க்கு வழி தெரிந்து கொண்டோம். மூன்று மணி நேரம் பஸ் பயணத்திற்க்கு பின் கசோல் வந்து சேர்ந்தோம். இமயமலையில் நடுவே உள்ள பள்ளத்தாக்கு பகுதியில் ஒலிந்திருக்கும் ஒரு சின்ன கிராமம். ஐந்து நிமிடத்தில் அந்த இடத்தை சுற்றிவந்துவிடலாம். அளவில் சிறியதாக இருந்தாலும் அங்கு இறங்கியவுடம் பல ஆச்சரியங்கள் எங்களை சூழ்ந்தன, எங்கள் மூவரை தவிர அங்கு இருந்தவர்கள் அனைவரும் வெளி நாட்டவர் ஐரோப்ப கண்டத்தில் ஏதோ ஒரு கிராமம் போல் இருந்தது. பார்வதி நதிக்கரையில் ஒரு ரெசார்ட்டில் தங்கினோம், மூன்று பேருக்கு சேர்த்து ஒரு நாளைக்கு 600 ரூபாய் என்று சொன்னவுடன் ஆச்சரியமாக இருந்தது. அவ்வளவு கம்மியாக வேறு எங்கும் நான் தங்கியதே இல்லை. இரண்டு நாள் தொடர் பயணம் காரணமாக அன்று ஒரு நாள் ஓய்வுஎடுக்கலாம் என்றானது.


ஒநாயிடம் மாட்டிக்கொண்டது, ஆப்பில் தோட்டம், **** தோட்டம், பனி மழையில் ஒரு குளியல், பனி மலை ஏற்றம், 16 மணி நேரம் ஒரே இடத்தில் மாட்டிக்கொண்டது, பூமியில் ஒரு சொர்க்கம் மேலும்  அடுத்த பதிவில்.1 comment:

Himachal Guide said...

Manali is truly a nice place to be must visited by everyone. One can visit Manali through Manali Volvo Package

Post a Comment